No icon

​​​​​​​அருள்சகோ. ராஜா, சே.ச, அருள்கடல், சென்னை.

கேட்பதை நிறைவேற்றும் புனித லூர்து அன்னை   (பிப்ரவரி 11)

உயிரும் மெய்யும் கலந்ததுதான்அம்மாஎன்ற உயரிய வார்த்தையாகும். அவள் ஒரு உயிருக்கு உருவத்தைக் தந்து -அந்த உயிரை இவ்வுலகத்தில் உலவ விடுபவளாகத் திகழ்கிறாள். அந்தத் தாய்மை இல்லை என்றால் இன்றைக்கு இந்தத் தலைமுறையே இல்லை. தாய்மையின் உன்னத அடையாளமாகத் திகழ்பவர்தான் நம் விண்ணகத்தாய்புனித லூர்து அன்னை”. இறைநம்பிக்கையோடும் அன்னையின் பரிந்துரையில் பற்றுறுதியோடும் அவரிடம் கேட்பதை நிறைவேற்றுகின்றார்.

புனித லூர்து அன்னையின் வரலாறு

பிரான்ஸ் நாட்டில் மூன்று மலைக் குன்றுகளால் சூழப்பட்டிருக்கும் அழகிய நகரம் லூர்து. இந்த நகரில் வாழ்ந்த பிரான்சுவா சுப்ரியுஸ் மற்றும் லூயிஸ் காஸ்தேரோ தம்பதியினருக்கு 1844, ஜனவரி ஏழாம் தேதி பிறந்த மகள் பெர்னதெத். இவர் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பக்தியும் நல்லொழுக்கமும் உடைய பெர்னதெத், 1858, பெப்ருவரி 11 ஆம் தேதி, மசபியேல் குகை அருகே விறகுச் சுள்ளிகள் பொறுக்குவதற்காகச் சென்றார். அப்போது அன்னை மரியா பெர்னதெத்திற்கு முதல் முறையாகக் காட்சி கொடுத்தார். 1858, ஜூலை 16 ஆம் தேதிக்குள் மொத்தம் 18 முறை அன்னை மரியா பெர்னதெத்திற்குக் காட்சி கொடுத்தார். தனக்குக் கிடைத்த காட்சிகளை அந்தச் சிறுமி பிறருக்கு எடுத்துக் கூறியபொழுது நிறைய பேர் முதலில் நம்பத்தயாராக இல்லை. பங்குத்தந்தையிடம் தான் கண்ட காட்சியை பெர்னதெத் எடுத்துரைத்தபொழுது அவரும் நம்பமறுத்து காட்சியில் வந்த பெண்ணின் பெயரைத் தெரிந்துகொண்டு வருமாறு கண்டிப்புடன் கேட்டுக்கொண்டார்.

பெர்னதெத்திடம் அன்னை கூறியவை

பெர்னதெத் தனக்குக் கிடைத்த காட்சிகளை நீளமாக எல்லாத் தகவல்களுடன் விவரித்திருக்கின்றார். அதில் முக்கிய பகுதி மட்டும் இங்கு சுருக்கமாகப் பின்வருமாறு பதிவுசெய்யப்படுகின்றது: ஆறாவது காட்சியின் பொழுது பாவிகளுக்காக மன்றாடுமாறு வேண்டினார். ஒன்பதாவது காட்சியின் பொழுது ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அதிலுள்ள நீரை அருந்தி, எனது முகத்தைக் கழுவுமாறும் சொன்னார். சிறிது கலங்கிய நீர் இருக்கக் கண்டு, அந்த இடத்தை என் கைகளால் சற்று தோண்டி, மூன்று முறை  என் கைகளால் வெளியேற்றிவிட்டு, நான்காம் முறை குடித்தேன். என் முகத்தைக் கழுவினேன். பத்தாவது காட்சியின்போது, அந்த இடத்திற்கு மக்கள் பவனியாக வரவேண்டும் என்றும் அவ்விடத்தில் ஒரு ஆலயம் கட்டப்பட வேண்டும் என்றும் எங்கள் பங்குக் குருவிடம் சொல்லச் சொன்னார். மார்ச் திங்கள் 24 ஆம் நாள் 16 வது முறையாக எனக்குத் தோன்றினார். எனது பங்குத் தந்தையின் கட்டளைப்படி, ‘அம்மா, உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்டேன். ‘நாமே அமல உற்பவம்என்று சொன்னார்கள். இங்கு பெர்னதெத் நம்பிக்கையுடன் கேட்டதை புனித லூர்து அன்னை நிறைவேற்றினார். இவருடைய அனுபவங்களை ஏற்றுக்கொண்ட திரு அவை, 1862, ஜனவரி 18 ஆம் நாள் அதிகாரபூர்வமாக புனித லூர்து அன்னையின் காட்சிகளை ஏற்றுக் கொண்டது. 1907 இல் இருந்து புனித லூர்தன்னை விழா பிப்ரவரி 11ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

நம்பிக்கையுடன் கேட்பதை கொடுப்பவர்

பெர்னதெத்திடம் லூர்து மாதா சொன்னபடி கெபிக்குமேல் பெரிய பசிலிக்கா கட்டப்பட்டு, லூர்து மாதா கையில் பெரிய செபமாலையும் அணியப்பட்டது. அந்த மசபியேல் குகையில் உருவாகிய ஊற்று நீரை இறைப்பற்றுறுதியோடு அன்னையிடம் வேண்டி பருகியவர்களில் பலர் அற்புதவிதமாகக் குணமடையத் தொடங்கினர். இன்றளவும் இலட்சக் கணக்கில் மக்கள் கூட்டம் லூர்து நகரில் அலைமோதுகின்றது. இறைநம்பிக்கையோடும் அன்னையின் பரிந்துரையில் பற்றுறுதியோடும் செல்பவர்கள் அற்புத நீரூற்றின் வழியாக பல அற்புதங்களைத் தங்கள் வாழ்வில் பார்க்கின்றனர். லூர்து நகரில் அழுகையும், செபமாலை சொல்லும் குரலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். எங்கு விசுவாசம் உண்டோ அங்கு சுகமளித்தலும், குணமடைதலும் உண்டு. இன்று லூர்து அன்னையின் திருத்தலங்களில் திருப்பயணிகள் கூட்டமாய்க் கூடுவதற்குக் காரணம், உடல் நோயினாலும், உள்ள வேதனையினாலும் நொந்து போயிருக்கும் மக்களுக்கு அன்னை ஆறுதலாய் இருப்பதோடு, தன்னுடைய பரிந்துரையினால் பல புதுமைகளை இயேசுவின் வழியாகச் செய்து வருகிறார் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், பெரும்பாலான மக்கள் தங்களின் அன்னை மரியா பக்தியை பெருமளவில் தனிப்பட்ட முறையிலும் குடும்பமாகவும் வெளிப்படுத்தினாலும் ஆண்டிற்கு ஒருமுறையாவது குழுமமாகச் சேர்ந்து திருப்பயணங்கள் மேற்கொள்கின்றனர். மேலும், குழுமமாகக் கூடிச் செபிக்கும்பொழுது தங்கள் கருத்துக்கள் நிறைவேறியதையும் நன்றியோடு அறிவிக்கின்றனர். தஞ்சாவூரில் உள்ள புனித லூர்து அன்னை திருத்தலப் பேராலயத்தில் (அறியப்படும் : பூண்டி மாதா திருத்தலப் பேராலயம்) நம்பிக்கையோடு வேண்டி குணம் பெற்றவர் சாட்சியாக கூறியது: என் பெயர் .ரெஜினாமேரி எனக்கு வலது கால் பாதத்தில் காளான்கள் முளைத்து மிகவும் அருவருக்கும்படியாக இருந்தது. டாக்டரிடம் காண்பித்தும் அவர்களால் எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள். பல மாதங்களாகியும் சரியாகவில்லை. ஒரு நாள் நான், “பூண்டி மாதாவே பூரண சுகம் தாரும்என்று வேண்டி எருக்கம்பாலை தடவி விட்டு படுத்தேன். என்ன ஆச்சரியம்! காலையில் பார்த்தால் பழைய மாதிரியே கால்கள் இருந்தன. படுக்கையை உதறிப் பார்த்தால் எதுவும் இல்லை. இந்த அற்புதத்தை எனக்கு நிகழ்த்திய பூண்டி மாதாவிற்கு கோடி நன்றிகள். இவ்வாறு தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் குழுமங்களிலும், பத்திரிகைகளிலும் வெளிப்படுத்தும் சாட்சியம் குழும வாழ்வின் கூட்டு ஆன்மீகத் தேடலுக்கும் அடித்தளம் அமைக்கின்றது.

நாளும் நமது கடமை

லூர்து அன்னையை நம்பி நாள்தோறும் செபமாலை சொல்லி செபிப்போம். ‘கூடிச் செபிக்கும்போது கோடி நன்மை உண்டுஎன்ற வாக்கின்படி கூடிச்செபித்து அன்னையை வாழ்த்தி நாமும் கோடி நன்மைகள் பெற்றிட வீட்டில், பங்குகளில் ஒருமனதாய் செபிப்போம். அன்னை மரிஇதோ, நான் ஆண்டவரின் அடிமைஎன்று கூறி அதன்படி வாழ்ந்ததால் இயேசுவின் தாயாகி, நம் துன்பங்களில் துணை நின்று நமக்காய் பரிந்து பேசுகிறார். எனவே, தாயின் வழிகாட்டுதலை நாமும், ஏற்று பாவத்திலிருந்து விலகி பரிசுத்தமாய் வாழ்வோம். லூர்து அன்னையின் புகழ் மென்மேலும் சிறப்படைவதாக இருந்தாலும், நமது சமூகச் சுழலில் பெண்களுக்கு என்று கொடுக்கப்படும் முக்கியத்துவம் மரியாதை கேள்விக்குரியதாக உள்ளது. ஒரு புறம் பெண் தெய்வமாக பார்க்கப்படுகிறாள். மறுபுறம் பெண் போகப் பொருளாக, வியாபாரப் பொருளாக நடத்தப்படுகிறாள். மேலும் பெருகிவரும் சமூக வலைத்தளங்களில் சிக்கித் தவிப்பது பெரும்பாலும் இளம் பெண்களே. உடல் நோயைவிடச் சமூக நோய்கள் இவர்களை வாழவிடாமல் உயிரோடு புதைத்து வருகிறது. இந்த இரட்டை வேடங்கள் மறைந்து பெண்களும் மனித மாண்பு நிறைந்தவர்களாக, ஆண்களைப்போன்று எல்லா நிலையிலும் மதிப்பும் சமத்துவமும் பெற்றிட வேண்டும். ஆண்கள் எந்த அளவுக்கு சமூக அமைப்பிலும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஈடுபட்டு உரிமை கொண்டாடுகின்றார்களோ, அந்த அளவுக்குப் பெண்களுக்கும் மேற்கூறப்பட்ட துறைகளில் அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும் என்று கூறுவதோடு அதன் அடிப்படையில் நன்கு வரையறுக்கப்பட்ட சமூக அமைப்பை உருவாக்கிடவும் முயலவேண்டும். இவற்றை நாம் விரும்பி அன்னையிடம் கேட்கும்போது அவற்றை அவர் மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவார். நாம் கொண்டாடும் தூய லூர்து அன்னைத் திருவிழா ஆடம்பரப் பகட்டாக மாறாமல், பெண்களின் வாழ்வை மேம்படுத்தும் விடுதலைக் கருவியாக மாற உறுதியெடுப்போம்.

 

Comment